திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் - 2,488 சிறப்பு முகாம்களில் 2,98,108 பேருக்கு கரோனா தடுப்பூசி :

திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங் களில் நேற்று 2,488 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 2,98,108 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று 623 இடங்களில் நடைபெற்ற மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசி 78,399 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 27,751 பேருக்கும் என மொத்தம் 1,06,150 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 750 இடங்களில் நடை பெற்ற சிறப்பு முகாமில் 66,766 பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டது. தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அருங்காட்சியக இயக்குநருமான எஸ்.ஏ.ராமன், ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் 540 இடங்களில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் 41,825 பேர் முதல் தவணை தடுப்பூசி, 19,899 பேர் 2-ம் தவணை தடுப்பூசி என மொத்தம் 61,724 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கரூர் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப் பள்ளி, கரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் நடந்த தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநருமான கொ.வீர ராகவராவ் புலியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார், கரூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, கரூர் நகர் நல அலுவலர் லட்சியவர்னா, கரூர் வட்டாட்சியர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 193 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், 24,082 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமை நேற்று தொடங்கி வைத்தார். துறைமங்கலம் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமை பெரம்பலூர் எம்எல்ஏ ம.பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

முகாம் தொடக்க நிகழ்ச்சி களுக்கு ஆட்சியர் ப.வெங்கட பிரியா தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், கோட்டாட்சியர் ச.நிறைமதி, நகராட்சி ஆணையர் குமரிமன்னன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் 382 இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் 40,000 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 39,386 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஜெயங்கொண்டம் நகர் மற்றும் துளாரங்குறிச்சி ஊராட்சியில் நேற்று நடைபெற்ற முகாமை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.

வெண்மான்கொண்டான் மற்றும் நாச்சியார்பேட்டை ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.எஸ்.கந்தசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE