திருநெல்வேலி மாநகராட்சியில் 152 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முதல்வரின் உத்தரவுப்படி, இன்று மாபெரும் இலவச கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. திருநெல்வேலி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் உள்ள 152 மையங்களில் முகாம் நடைபெறும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
மேலும், அரசு வழிகாட்டுதலின்படி, அனைத்து பெரு மற்றும் சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கண்டிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாத பணியாளர்களை அந்நிறுவனத்தின் உரிமையாளர் வேலைக்கு அமர்த்தக் கூடாது. தவறும் பட்சத்தில் விதிகளுக்குட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தடுப்பூசி வாகனத்தை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையர் தொடங்கி வைத்தார். மாநகர் நல அலுவலர் வி. ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருநெல்வேலியில் இன்று நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார். பாளையங்கோட்டையில் மனகாவலம்பிள்ளை மருத்துவமனையில் நடைபெறும் முகாமை தொடங்கி வைக்கும் அவர், தொடர்ந்து தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமையும், புளியங்குடி மற்றும் தென்காசியில் நடைபெறும் முகாம்களையும் ஆய்வு செய்கிறார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago