நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து தரும்படி பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. இதன்பேரில் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி செல்லபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாயமான செல்போன்களை கண்டுபிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 301 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை திரும்ப ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தலைமை வகித்து செல்போன்களை வழங்கிப் பேசியதாவது:
தற்போது செல்போன் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. செல்போனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பொது இடங்களிலோ, சாலையிலோ மற்றும் பேருந்திலோ கேட்பாரற்று செல்போன் கிடந்தால் அதனை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன் உரிமையாளர்யார் என்று கண்டறிந்து ஒப்படைக்கப்படும்.
மேலும், ஆன்லைன் தொடர்பான மோசடி, செல்போன் திருட்டு போன்ற சைபர் கிரைம் குறித்த புகார்களை 155260 என்ற எண்ணிற்கும், குழந்தைத் திருமணம் புகார்களை 1098 என்ற எண்ணிற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை 181 என்ற எண்ணிற்கும் தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago