விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சம்பாபயிருக்கு பயிர்க் காப்பீடு செய்வது தொடர்பான வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப் பட்டது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நடவு செய்துள்ள விவசாயிகள் நவம்பர் 30-ம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்ய ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ. 442 கட்டணமாக செலுத்த வேண்டும். பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீடு தொகை செலுத்தலாம்.
அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும்ஆதார் அட்டை ஆகியவற்றுடன் விவசாயின் பெயர், நிலப்பரப்பு,சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளிக்க வேண்டும். கடன் பெறும் விவசாயிகளுக்கு அவர்களின் ஒப்புதலை பெற்றே வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வேளாண் இணை இயக்குநர் ரமணன், கூட்டுறவு இணைப் பதிவாளர் பிரபாகரன், விழுப் புரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago