கட்டிட மற்றும் கட்டுமான மதிப்பில் 1 சதவீதமாக வசூலிக்கப்படும் நல வரியை 3 சதவீதமாக உயர்த்தி வசூலிக்க வேண்டும் என்று ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் நாளை (செப்.11) தமிழ்நாடு கட்டுமான பெண் தொழிலாளர் சங்க மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, பெரிய மிளகுப்பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் கே.ரவி நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
கட்டிட, கட்டுமான பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் களையும் வகையிலும், அவர்களது கோரிக்கைகள், உரிமைகள் ஆகியவற்றை வென்றெடுக்கும் நோக்கிலும் திருச்சியில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
ஏஐடியுசி தேசியச் செயலாளர் வகிதா நிஜாம் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டை திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி தொடங்கி வைக்கிறார். கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஜோதிமணி மாநாட்டில் நிறைவுரையாற்றுகிறார்.
கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு பேறு காலத்தில் குறைந்தது 6 மாதங்கள் ரூ.15,000 வீதம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். ஆண், பெண் என்ற பாகுபாடின்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். ஓய்வுபெறும் வயதை 50 ஆக நிர்ணயித்து, ஓய்வூதியமாக மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.6,000 வீதம் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலில் அனைத்துப் பிரிவுகளிலும் பெண்கள் பணியாற்றும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க வேண்டும். சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் 33 சதவீத இடஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்துவதுடன், 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில் மதுக் கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் ரூ.4,000 கோடி நிதி இருப்பு உள்ளது. இந்தநிலையில், கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அனைத்து தொழிலாளர் சட்ட பலன்கள் கிடைக்கும் வகையில் கட்டிட, கட்டுமான மதிப்பில் 1 சதவீதமாக வசூலிக்கப்படும் நல வரியை 3 சதவீதமாக உயர்த்தி வசூலிக்க வேண்டும்.
இதன்மூலம் கட்டுமான நல வாரியத்துக்கு அரசு தனியாக நிதி ஒதுக்க தேவை ஏற்படாமல், நல வாரியமே போதிய அளவுக்கு தொழிலாளர்களுக்கு பலன்களை வழங்க முடியும் என்றார்.
ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் இரா.முருகன், மாவட்டத் தலைவர் கே.சுரேஷ், மாவட்டச் செயலாளர் சி.செல்வகுமார், கட்டுமான பெண் தொழிலாளர் சங்க நிர்வாகி மருதாம்பாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago