ஒரு ஆசிரியைக்கு மட்டும் கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் - அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்தது ஏன்? : முதன்மை கல்வி அலுவலர் விளக்கமளிக்க கரூர் ஆட்சியர் உத்தரவு

By செய்திப்பிரிவு

ஒரு ஆசிரியைக்கு மட்டும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்தது ஏன்? என கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஆட்சியர் விளக்கம் கேட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் பொரணி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கடந்த 5-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர், 18 ஆசிரியர்கள், ஒரு அலுவலக உதவியாளர் என 20 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் உத்தரவின்படி பள்ளிக்கு நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அப்பள்ளியில் ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 6 ஆசிரியர்கள் மட்டும் பள்ளியில் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோதுதான் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது ஆட்சியருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து கேட்பதற்காக முதன்மைக் கல்வி அலுவலரை ஆட்சியர் செல்போனில் தொடர்புகொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை விடுவதற்கான அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது என கேட்டு, பொறுப்பு தலைமை ஆசிரியரை ஆட்சியர் எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் கேட்டபோது, “கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளின்படி 3 அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு இருந்தால்தான் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அதுவும், அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தே முடிவெடுக்க வேண்டும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்று தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தால் மாணவர்கள், பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்றார்.

இதுகுறித்து முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமாரிடம் செல்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, “ஆட்சியர் ஆய்வின்போது நான் முக்கிய அலுவல் பணியில் இருந்ததால் உடன் செல்ல முடியவில்லை. ஆட்சியரின் அழைப்பையும் ஏற்க முடியவில்லை” என்றார்.

இதற்கிடையே, அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட அனைவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்ததையடுத்து, நேற்று வழக்கம்போல பள்ளி செயல்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்