ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் வரும் 12-ம் தேதி ஒரே நாளில் 3.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த முகாம் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாவட்ட வன அலுவலர் அருண்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத் தில் 18 வயதுக்கு மேற்பட்டவர் களின் எண்ணிக்கை 19 லட்சத்து 62 ஆயிரத்து 896 பேர் உள்ளனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையிலான நிலவரப்படி 8 லட்சத்து 39 ஆயிரத்து 261 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 257 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
எனவே, வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு முகாம்கள் மூலம் மாவட்டத்தில் 1.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கை அடைய முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக செய்தியாளர் களிடம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூறும்போது, ‘‘கடந்த ஒராண்டாக முகக்கவசத்துடன் வாழ்ந்து வருகின்றோம். அதனை தவிர்க்க கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வரும் 12-ம் தேதி அன்று மட்டும் 1.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுமார் 82 ஆயிரம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை.
எனவே, வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று 860 கிராம பஞ்சாயத்து, 10 பேரூராட்சி, 4 நகராட்சிகள் அடங்கிய பகுதிகளில் 973 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வரும் 12-ம் தேதி டாஸ்மாக் கடைகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் மதுபாட்டில் விற்கப்படும்’’ என தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம்
வேலூர் மாநகராட்சி பகுதி களில் தினசரி 50 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், வேலூர் கொணவட்டம் பகுதியில் உள்ள இந்து மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இது குறித்து செய்தியாளர் களிடம் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் 13 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, 6.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்கள் அனை வரும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கல்லூரி, பள்ளி ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் கண்டிப்பாக தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் அவர்கள் மூலம் குழந்தைகளுக்கு எளிதில் தொற்று பரவுவது தடுக்க முடியும். விரைவில், டாஸ்மாக் கடைகளிலும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கும் திட்டம் அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’’ என்றார்.
அப்போது, வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர நல அலுவலர் மணிவண்ணன், 2-வது மண்டல உதவி ஆணையாளர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார்.மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து பேசும்போது, “திருப்பத்தூர் மாவட்டத்தில் தினசரி 40-க்கும் மேற்பட்ட முகாம்களில் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தினசரி 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து சிறப்பு மையங்களில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்முகாம் குறித்து மாவட்டம் முழுவதும் ஒலிப்பெருக்கி மூலமாகவும், உள்ளூர் தொலைக்காட்சி மூலம், துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சிறப்பு முகாம் மூலம் மாவட்டம் முழுவதும் அன்று ஒரே நாளில் சுமார் 65 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன், சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, மகளிர் திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 12-ம் தேதி 66 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago