கீழ்பவானி அணை (பவானிசாகர்) மற்றும் கீழ்பவானி பாசனத்திட்டம் உருவாக முக்கியக் காரணமாக விளங்கிய தியாகி ஈஸ்வரனுக்கு சிலை மற்றும் நினைவு அரங்கம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் நேற்று அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கம், புகலூர் பாரி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழக இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியைப் பயன்படுத்தி, வாதாடி, கீழ்பவானி பாசனத் திட்டத்தை தியாகி ஈஸ்வரன் பெற்றுத் தந்தார். அவரது முயற்சியால், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றன. தியாகி ஈஸ்வரனுக்கு சிலையும், நினைவு மண்டபமும் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அதற்கான அறிவிப்பு வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்கு காரணமான தமிழக முதல்வர், செய்தித்துறை அமைச்சர், ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துசாமி, திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ உள்ளிட்டோருக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம், எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் சிறுபான்மைப்பிரிவு துணைத்தலைவர் கே.என். பாஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago