உயர் மின்கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம், உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையிலான விவசாயிகள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:
நாமக்கல் மாவட்டத்தில் புகலூர் முதல் சத்தீஸ்கர் மாநிலம் வரை செல்லும் 800 கேவி உயர் மின்கோபுரம் திட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையம் தாலுகாவிலும், பவர் கிரிட் மூலம் புகலூர் முதல் திருவலம் வரை செல்லம் 400 கேவி உயர் மின்கோபுரம் திட்டம் மோகனூர், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வழியாகவும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் விவசாயிகளுடைய கடுமையான ஆட்சேபனைக்குப் பிறகும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மரம் பயிருக்கான இழப்பீட்டு தொகையை முழுமையாக கணக்கிட்டு வழங்க வேண்டும். நிலத்திற்கான இழப்பீட்டு தொகையை 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் சந்தை மதிப்பீட்டில் தீர்மானித்து உரிய தொகையை வழங்க வேண்டும்.
மின்சார வாரியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்ட மின் கோபுரங்களுக்கு வாடகை வழங்க வேண்டும். தமிழக அரசின் அரசாணையின்படி இழப்பீட்டு தொகையை பத்து மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும். மரம், பயிர் நிலத்திற்கான மொத்த இழப்பீடு நூறு சதவீதம் உயர்த்தி கருணைத் தொகை வழங்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு கீழேறிப்பட்டி முதல் பரமத்தி, நல்லூர் கந்தம்பாளையம் வரையில் செயல்படுத்தப்பட உள்ள 110 கேவி திட்டத்தை சாலையோரம் கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிர்வாகி சுரேஷ் ஆகியோர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago