திருச்செங்கோட்டில் இந்தியன் வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பாதுகாப்பு அறையை திறக்க முடியாததால் தப்பி உள்ளனர். அவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் இந்தியன் வங்கிக் கிளை அமைந்துள்ளது. வங்கிக்கு நேற்று காலை ஊழியர்கள் வந்தபோது, டியூப் லைட்கள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும், வங்கியின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டிருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வங்கியில் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் லைட்டுகள், சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்து பாதுகாப்பு அறையை திறக்க முயற்சித்துள்ளனர். எனினும், பாதுகாப்பு அறை திறக்க முடியாததையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பியது தெரியவந்துள்ளது.
வங்கியில் பணம், நகை எதுவும் திருடு போகவில்லை. திருச்செங்கோடு நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago