அரசு வழங்கிய வீட்டுமனைகளை அளவீடு செய்து தரக்கோரி, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை, மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச்சங்கத்தின் தலைவர் துரைராஜ் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். தமிழக அரசு தங்களுக்கு வழங்கிய வீட்டுமனையை சமன் செய்து, அளவீடு செய்து தரக்கோரி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து சங்கத்தின் தலைவர் துரைராஜ் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 82 மாற்றுத்திறனாளிகளுக்கு, சித்தோடு நல்லகவுண்டம்பாளையத்தில், 2018-ம் ஆண்டு அரசு வீட்டுமனை வழங்கியது. வீட்டுமனைக்கு வழங்கப்பட்ட இடம், கரடு, முரடாக, பாறைகளாக இருந்தது. அதனை சமன் செய்து, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அளவீடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இது தொடர்பாக பல கட்ட போராட்டங்களை நடத்தியும், பலன் கிடைக்கவில்லை. அரசு அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றார்.
அவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கெனவே, பலமுறை அதிகாரிகள் உறுதி அளித்தும், அவை நிறை வேற்றப்படவில்லை என்பதால், வீட்டுமனையை சமன் செய்து, அளவீடு செய்து தரும்வரை, ஆட்சியர் அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறப்போவதில்லை என்று மாற்றுத்திறனாளிகள் உறுதியாகத் தெரிவித்தனர்.
இதனிடையே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் செல்போனில் தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளிகளை சமரசம் செய்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago