பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக் கோரி - டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.சரவணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.சிவக்குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

18 ஆண்டுகளாக டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 27,000 பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உபரி பணியாளர்களை அரசு மற்றும் அரசுத் துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும். ஏபிசி சுழற்சி முறை பணியிட மாறுதலை அமல்படுத்த வேண்டும். கரோனாவால் உயிரிழந்த பணியாளர்களுக்கு நிவாரண நிதி வழங்குவதுடன், அவர்களது வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். சிறிய தவறுகளுக்காக ஆண்டுக்கணக்கில் மதுபான கிடங்கில் பணியாற்றும் பணியாளர்களை உடனடியாக கடையில் பணியமர்த்த வேண்டும்.

பல்வேறு காரணங்களால் பணி வழங்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் உள்ளவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் மேலாண் இயக்குநரின் உத்தரவை மதிக்காமல் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாவட்ட மேலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவர் வீ.கோவிந்தராஜன், செயலாளர் பி.முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாரதீய டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலப் பொதுச் செயலாளர் டி.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஆர்.ராஜகோபால், சி.கோபு, வி.கருப்பண்ணன், பாரதீய மஸ்தூர் சங்கத்தின் மாநிலச் செயலாளர்கள் எஸ்.பாலகுமாரன், பி.தணிகை அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்