மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து - குண்டூர் ஊராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து குண்டூர் ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சியுடன் அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய 5 ஒன்றியப் பகுதிகளில் உள்ள 25 ஊராட்சிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில், திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட பனையக்குறிச்சி, குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி, கீழக்குறிச்சி ஆகிய 5 ஊராட்சிகளும் இணைக்கப்படவுள்ளன.

இதையடுத்து, திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே குண்டூர் ஊராட்சி பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

400-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘‘ஊராட்சியில் 10,000-க்கும் அதிகமானோர் வசித்து வரும் நிலையில், பெரும்பாலானோர் விவசாயக் கூலி வேலைக்குச் சென்று வருகிறோம். இந்தநிலையில், எங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் கிராமப்புறங்களில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் பறிபோகும்.

எனவே, குண்டூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது’’ என்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்