திருச்சி, கரூர் மாவட்டங்களில் - மாட்டுவண்டி மணல் குவாரி திறக்கக் கோரி போராட்டம் :

By செய்திப்பிரிவு

திருச்சி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் குவாரிகளை திறக்கக் கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் மாதவப்பெருமாள் கோவில், தாளக்குடி ஆகிய இடங்களில் இருந்த மாட்டுவண்டிகளுக்கான மணல் குவாரி கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டது.

இந்தக் குவாரிகளை திறக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபடுவதற்காக பொதுப்பணித் துறை நீர் வள ஆதார அமைப்பு அலுவலக வளாகம் முன் சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று திரண்டனர்.

அவர்களுடன் போலீஸார் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, தொழிலாளர்கள் மறியலைக் கைவிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் மாநகர் ரங்கராஜன், புறநகர் பன்னீர்செல்வம், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, கரூர் மாவட்டத்தில் மாட்டுவண்டிகளுக்கான மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் எம்.தண்டபாணி தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் விளக்க உரையாற்றினார்.

தொடர்ந்து, ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் மனு அளிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்ததை அடுத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்