திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் 10 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கட்டணமின்றி முடி காணிக்கை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி ஆவணித் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்று வருகின்றன. ஆவணித் திருவிழாவில் 11-ம் நாளான நேற்று காலையும், மாலையும் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் உலா வந்தனர். ஆவணித் திருவிழா இன்றுடன் (செப்.7) நிறைவடைகிறது.
திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 5 வரை 10 நாட்களுக்கு கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நேற்று முதல் நீங்கியது. இதனால், நேற்று முதல் பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயில் மற்றும் கடற்கரை பகுதியில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த கட்டணம் கிடையாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு திருச்செந்தூர் கோயிலில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இதையடுத்து திருச்செந்தூர் கோயிலில் நேற்று முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்களுக்கு கட்டணம் கிடையாது என எழுதப்பட்டிருந்த சீட்டு வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கட்டணமின்றி முடி காணிக்கை செலுத்தி, கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதேவேளையில் நாழிக்கிணறு தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராட நேற்று அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் நாழிக்கிணறு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago