ஈரோடு மாவட்ட விவசாயத் தேவைக்காக 944 மெட்ரிக் டன் யூரியா வந்துள்ளதாக வேளாண் இணை இயக்குநர் எஸ். சின்னசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சம்பா சாகுபடிக்குத் தேவையான உரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, காரைக்கால் துறைமுகத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் ஈரோட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்திற்கு 944 மெட்ரிக் டன் யூரியா உரம் ரயில் மூலம் வந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்குத் தேவையான உரங்கள் அனைத்தும், தனியார் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது யூரியா 1262 மெட்ரிக் டன், டி.ஏ.பி 2057மெட்ரிக் டன், பொட்டாஷ் 2366 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 7300 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளன.
45 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை யூரியாவின் அதிக பட்ச விற்பனை விலை ரூ.266.50 மட்டுமே. சில்லரை உர விற்பனையாளர்கள், அதிக பட்ச விற்பனை விலைக்கு கூடுதலாகவோ, யூரியா உரத்துடன் வேறு ஏதேனும் இடுபொருட்களைக் கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விற்பனை செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பான புகார்களை, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும், ஈரோடு மாவட்ட தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குநரிடமும் (04242339101) தெரிவிக்கலாம்.
மேலும், விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண்பரிசோதனை செய்து பெறப்பட்ட மண்வள அட்டைகளின் அடிப்படையில் அல்லது வேளாண்மை துறை பரிந்துரைப்படி உரமிட வேண்டும். தேவைக்கு அதிகமாக யூரியா உரம் பயன் படுத்துவதை தவிர்க்கவும். தேவைக்கு அதிகமாக உரம் பயன்படுத்துவதால், பயிர்களில் பூச்சி நோய்த் தாக்குதல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. உர விற்பனையாளர்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, விற்னை முனைய கருவி மூலமாக மட்டுமே விவசாயிகளுக்கு உரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago