ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், திட்ட இயக்குநர் செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் கோமதி வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து, ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, போஷன் அபியான் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து போஷன் அபியான் உறுதிமொழி ஏற்றார். அவரை தொடர்ந்து, அரசு அதிகாரிகள், அங்கன்வாடி பணி யாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இதையடுத்து, ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசும்போது, ‘‘மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு செய்தியை பொது மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி களில் குழந்தைகளிடையே காணப்படும் குள்ளத்தன்மை, மெலிவுத் தன்மை, எடைக்குறைவு, பிறப்பு எடைக்குறைவு, ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை போன்ற குறைபாடுகளை குறைக்கவும், தவிர்க்கவும் போதுமான விழிப் புணர்வு ஏற்படுத்தப்படும்.
கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு
அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்மாதம் முழுவதும் நடைபெறும். கர்ப்பிணிகள் தினசரி ஊட்டச் சத்து மிக்க காய்கறி, கீரை, பழம் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கார்போஹைட்ரேட் சத்து அதிகமுள்ள கோதுமை, அரிசி, உருளை கிழங்கு போன்ற உணவு களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். புரதச்சத்து அதிகம் உள்ள முட்டை, இறைச்சி போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும்.
குழந்தை பிறந்த 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே குழந்தை களுக்கு கொடுக்க வேண்டும். இதை கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள் பின்பற்றினால் நலமோடு வாழலாம்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து, வளர் இளம் பெண்களுக்கு விழிப் புணர்வு கையேடுகள் மற்றும் புதுமண தம்பதியர்களுக்கு குழந்தைகளின் முதல் 1,000 நாட்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை ஆட்சியர் அமர் குஷ்வாஹா வழங்கினார். பிறகு, குழந்தையின் முதல் 1,000 நாட்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ராட்சத பலூனை ஆட்சியர் அமர் குஷ்வாஹா பறக்க விட்டார்.
நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சக்தி சுபாஷினி, அங்கன் வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago