இருவேல்பட்டு அரசு விதைப் பண்ணையில் - பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

தமிழகத்திலேயே முதல் முறையாக விழுப்புரம் அருகே இருவேல்பட்டு அரசு விதைப்பண்ணையில் பாரம்பரிய நெல்விதைகள் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நெல் விதைகளான தூயமல்லி 2 ஏக்கரிலும், செங்கல்பட்டு சிறுமணி 2 ஏக்கரிலும் விதைப்பண்ணையில் நாற்றிடப்பட்டு இயற்கை முறையில் பயிரிடப்படுகிறது.

இந்த விதை நெல் உற்பத்தி பணியை ஆட்சியர் மோகன் தொடங்கி வைத்தார். அரசு விதைப்பண்ணையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் தூயமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறுமணி பாரம்பரிய நெல் விதைகளை விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களுக்கு கொண்டு சென்று இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ள ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு வழங்கிட ஆட்சியர் வேளாண் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இயற்கை முறையிலான பாரம்பரிய நெல் விதைகளை விவசாய நிலங்களில், செயற்கை முறையில் அல்லாத இயற்கையான உரங்களை கொண்டு பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் அதிகப்படியான மகசூல் பெற்று பயனடைய முடியும் என்று அப்போது ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது வேளாண் துறை இணை இயக்குநர் ரமணன், வேளாண் துறை துணை இயக்குநர் வேல்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்