தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
பல பகுதிகளில் ஏற்கெனவே பதவியில் இருந்தவர்கள், அவர்களது வாரிசுகள் தொடர்ந்து போட்டியிடும் நிலை உள்ளது. இவர்கள் தேர்தல் தேதி அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். தேர்தல் ஆணையத்தால் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தென்காசி மாவட்டத்தில் சில பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது.
கீழப்பாவூர் ஒன்றியம் குலசேகரப்பட்டி ஊராட்சியில் ஷாலிமேரி என்பவரும், அரியப்பபுரம் ஊராட்சியில் தினேஷ்குமார் என்பவரும், கடையம் ஒன்றியம் கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பரமசிவன் என்பவரும் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் பட்டதாரிகள்.
இவர்களுக்கு ஆதரவாக இளைஞர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்த பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வாட்ஸப் குழுக்களை தொடங்கியும், முகநூல் மூலமாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று, தாங்கள் வெற்றி பெற்றால் என்னென்ன திட்டங்களை செய்வோம் என்பது குறித்து பேசி, திண்ணைப் பிரச்சாரமும் செய்கின்றனர்.
கிராமப்புறங்களில் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலை விட உள்ளாட்சித் தேர்தலே அதிக விறுவிறுப்பாக இருக்கும். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago