நீலகிரி மலை ரயில் சேவை வரும் 6-ம் தேதிமுதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நீலகிரி மலை ரயில் சேவை கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. தற்போது கரோனா தொற்று குறைந்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 6-ம் தேதி முதல் மலை ரயில் தினமும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே முதுநிலை கோட்ட மேலாளர் எம்.பூபதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:
நீலகிரி மலை ரயில் வரும் 6-ம் தேதி முதல் தினமும் இயக்கப்படும். மேட்டுப்பாளைத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, காலை 11.55 மணிக்கு உதகை வந்தடையும். மதியம் 2 மணிக்கு உதகையில் இருந்து புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். உதகை - குன்னூர் இடையேயும் மூன்று முறை மலை ரயில் இயக்கப்படும். இந்த ரயில் முழுவதும் முன்பதிவு முறையிலேயே இயக்கப்படும்.
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 4 பெட்டிகளுடனும், குன்னூர் முதல் உதகை வரை 5 பெட்டிகளுடன் மலை ரயில் இயக்கப்படும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது என கரோனா வழிமுறைகளை பயணிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வடிவமைக்கப்பட்ட நிலக்கரி நீராவி இன்ஜின் திருச்சியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 6-ம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago