கூட்டாறு வெள்ளத்தில் ஆற்றைக் கடந்து - மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசிசெலுத்திய மருத்துவக் குழுவினர் :

By எம்.நாகராஜன்

உடுமலை அருகே கூட்டாற்றில் ஓடும் வெள்ளத்துக்கு நடுவே உயிரைபணயம் வைத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக்குழுவினர் கடந்துசென்று, மலைவாழ் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

உடுமலையில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் தமிழகம் மற்றும் கேரள எல்லையான சின்னாறு உள்ளது. அங்கிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள தளிஞ்சிமலைக்கிராமத்தில் சுமார் 300-க்கும்மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் உமாராணி தலைமையிலான நடமாடும் மருத்துவக்குழுவினர் ஆம்புலன்ஸில் சென்றனர்.

சின்னாற்றில் இருந்து தளிஞ்சி செல்ல சின்னாறு, தேனாறு, பாம்பாறு சந்திக்கும் கூட்டாற்றை கடந்துதான் செல்ல வேண்டும். கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. உயிரை பணயம் வைத்து ஆம்புலன்ஸ் மூலம், கூட்டாற்றை கடந்து, வெற்றிகரமாக மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி விட்டு மருத்துவக்குழுவினர் திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் உமாராணி கூறும்போது, ‘‘உடுமலை, அமராவதி மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த எங்கள் குழுவினர் முடிவு செய்துள்ளோம். அதன்படி, தடுப்பூசி செலுத்துவதற்காக தளிஞ்சி செல்லமுடிவெடுத்தோம். கூட்டாற்று வெள்ளம் அச்சத்தை ஏற்படுத்தினாலும், ஆம்புலன்ஸில் துணிச்சலுடன் சென்றுவந்தோம். அதன்பின் கோடந்தூர் மலைக்கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்ல முடியாது என்பதால் சரக்கு வாகனத்தில் சுமார் 4 மணி நேரம் நின்று கொண்டே சென்றோம். அங்குள்ள மலைவாழ் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்திவிட்டு திரும்பியுள்ளோம். இவ்விரு பகுதிகளில் 118 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்