மதுரையில் பாரம்பரியமான திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கோடைக்காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக, புது மண்டபம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், வசந்த மண்டபம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.
காலப்போக்கில், இந்த கோயில் மண்டபத்தை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம், வியாபாரிகளுக்கு வாடகைக்கு விட்டது. இதனால் புதுமண்டபம் வியாபார ஸ்தலம் போலவே செயல்படத் தொடங்கியது.
தற்போது மண்டபத்தின் உள்ளேயும், சுற்றிலும் வியாபாரிகள் கடைகளை வைத்துள்ளனர். இங்கு அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் தேவையான ஆடைகள், பொருட்கள், பாரம்பரிய பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.
மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் புதுமண்டபத்துக்கு சென்று பொருட்களை வாங்கிச் செல்வர்.
இந்த புதுமண்டபத்தின் சிற்பங்களையும், அதன் பாரம்பரியத்தையும் பாதுகாக்கவும், புதுப்பிக்கவும் இங்குள்ள வியாபாரிகளை மாற்று இடத்துக்கு இடமாற்றம் செய்வதற்காக மதுரை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ. 7.91 கோடி மதிப்பீட்டில் புதிதாக குன்னத்தூர் சத்திரக் கட்டிடம் கட்டப்பட்டது.
இந்தக் கட்டிடத்தில் புதுமண்டபத்தில் கடைகளை வைத்திருந்த வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கி தருவதாக மாநகராட்சி உறுதி அளித்திருந்தது.
இக்கட்டிடத்தில் 190 கடைகளும், 90 டெய்லரிங் கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. குன்னத்தூர் சத்திரத்தில் உள்ள கடைகளை புதுமண்டபம் வியாபாரிகளுக்கு ஒதுக்க டெண்டர் விட்டு வாடகை நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கை புதுமண்டபம் வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து புது மண்டபம் வியாபாரிகள்-தையல் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஜி.முத்துப்பண்டி கூறியதாவது:
குன்னத்தூர் சத்திரத்தில் மொத்தம் 195 கடைகள் மட்டுமே உள்ளன. அவையும் சிறிதும், பெரிதுமாக உள்ளன. 2-ம் தளத்தில் காலியிடம் உள்ளதாக கூறியுள்ளனர்.
புதுமண்டபத்தில் 300 கடைகள் உள்ளன. குன்னத்தூர் சத்திரத்தில் ஏற்கெனவே 21 கடைகள் இருந்துள்ளன. அவர்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும். அனைவருக்கும் போதுமான கடைகள் இல்லை. திட்டமிட்டு கட்டாததால் சிக்கல் எழுந்துள்ளது. அனைவருக்கும் கடைகளை ஒதுக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் சதுர அடி அடிப்படையில் வாடகை நிர்ணயிப்பதாகக் கூறினர். ஆனால், இந்த ஆட்சியில் ஏலம் விடுவதாக கூறுகின்றனர். புதிதாக வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கினால் ஏலம் விடலாம். ஆனால் புது மண்டபத்தில் ஏற்கெனவே கடைகள் வைத்திருந்தவர்களுக்கு மாற்று இடமாகத்தான் ஒதுக்கப்படுகிறது. மேலும் அங்கு கடை வைத்திருந்தவர்கள், ஏலம் எடுத்து வாடகை செலுத்தும் அளவு வசதி படைத்தவர்கள் இல்லை என்றார்.
மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘குன்னத்தூர் சத்திரத்தில் புதுமண்டபம் வியாபாரிகள் அனைவருக்கும் கடைகள் ஒதுக்கப்படும். ஆனால், கடைகளை குலுக்கல் முறையில், அங்குள்ள வாடகை அடிப்படையில் வழங்க முடியாது. அவர்களுக்கு ஏலம் முறையில் விட்டு வாடகை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது, ’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago