ஈரோடு பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகத்தில் ஆய்வு - தரம் குறைவான பூச்சி மருந்து உற்பத்தி செய்தால் நடவடிக்கை : வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

ஈரோடு திண்டலில் செயல்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வகத்தில், வேளாண் இணை இயக்குநர் ஆய்வு செய்தார்.

வேளாண்மைத் துறையின் கீழ், ஈரோடு திண்டலில் செயல்பட்டு வரும் மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீட்டு மையம் உள்ளது. இம்மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி, உரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்களில் பணிபுரியும் வேளாண்மை அலுவலர்களுக்கான இணையதள வழி பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ், மாநிலம் முழுவதும் 12 பூச்சிக்கொல்லி ஆய்வகங்கள் மற்றும் 3 குறியீட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தரமற்ற பயிர் பாதுகாப்பு மருந்துகள் தயாரிக்கப்படுவதையும் மற்றும் விற்பனை செய்வதையும் தடுப்பதே இந்த ஆய்வகத்தின் நோக்கமாகும்.

கோவை, திருப்பூர், நாமக்கல், கருர், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருச்சி ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் இருந்து, அவ்வட்டாரத்தின் பூச்சி மருந்து ஆய்வாளர்களால் தர ஆய்விற்காக எடுக்கப்பட்டு, மருந்து மாதிரிகள் இம்மையத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த மருந்து மாதிரிகளின் அணி எண், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, உற்பத்தி செய்த நிறுவனம் ஆகிய விவரங்கள் இம்மையத்தில் சரிபார்த்து பதிவு செய்யப்படுகிறது.

அதன்பின்னர், பூச்சிக்கொல்லி மருந்துகளின் மாதிரிகளை வேறு புதிய கொள்கலனுக்கு மாற்றம் செய்யப்பட்டு ரகசிய குறியீடுகள் தரப்பட்டு, கோவை, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 5 ஆய்வகங்களுக்கு தர ஆய்விற்காக அனுப்பப்படுகிறது.

பரிசோதனை மையத்தில் தர ஆய்வு செய்யப்பட்டு, மீண்டும் தர ஆய்வு முடிவுகள், இம் மையத்திற்கு அனுப்பப்படுகிறது. இங்கிருந்து சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களுக்கு பரிசோதனை முடிவுகள் அனுப்பப்படுகின்றன.

இதன் அடிப்படையில், தரம் குறைவான மருந்து உற்பத்தி செய்பவர்கள், விற்பனையாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீட்டு மையத்தின் வேளாண்மை துணை இயக்குநர் பொ.அசோக்குமார் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் ஆ.தமிழ்செல்வன், வேளாண்மை அலுவலர்கள் யு.வைத்தீஸ்வரன், சங்கீதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்