நாமகிரிப்பேட்டையை அடுத்த புதுபாலப்பட்டியில் அமைக்கப்பட்ட புதிய செல்போன் டவரை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது:
மலைஅடிவாரத்தில் இருக்கும் புதுபாலப்பட்டியில், செல்போன் டவர் அமைக்க நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் செல்போன் மற்றும் இணைய வசதிகளைப் பெறுவதில் இடையூறு ஏற்பட்டது. கரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் இயங்காத நிலையில், மாணவர்கள் கல்வி கற்க செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
சுற்றுலாத்துறை அமைச்சரின் உத்தரவின்பேரில், இந்த கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க, 2400 சதுர அடி நிலம் தேர்வு செய்யப்பட்டு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் மூலம் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த டவர் மூலமாக, 6 கிராமங்களில் உள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் என 1,500-க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு இணைப்புதாரர்கள் பயன்பெறுகின்றனர், என்றார்.
இதனைத் தொடர்ந்து, முள்ளுக்குறிச்சி சாலை முதல் பெரியகோம்பை சாலை வரை சாலை விரிவுப்படுத்தும் பணி தொடர்பாக ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார், ராசிபுரம் வட்டாட்சியர் ப.கார்த்திகேயன், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago