காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய நீரை, தினந்தோறும் நீர் பங்கீடு என்ற முறையில் பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்திற்கு 30 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டுமென காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடப்பு மாதத்தில் நல்ல மழை பொழிந்து, அணைகள் நிரம்பி வழிந்தால் மட்டுமே, இந்த நீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும். கடந்த 3 ஆண்டுகளாக, நல்ல மழை பெய்ததால் காவிரித் தண்ணீர் பங்கீட்டுத் தகராறு தலைதூக்கவில்லை.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய நீரினை, தினந்தோறும் நீர் பங்கீடு என்ற முறையில் பங்கீடு செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் அறிவித்து வருவதைப்போல, காவிரியில் வரும் நீரையும், தீர்ப்பின் அடிப்படையில், தினந்தோறும் பங்கிட்டுக் கொள்வதே ஏற்றத்தீர்வாக இருக்கும்.
தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் உண்டான உரிமை நீரை எக்காரணத்தை முன்னிட்டும் கர்நாடக நீர்த் தேக்கங்களில் தேக்கி வைக்கக் கூடாது. இதுவே இரு மாநில மோதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago