அந்தந்த கல்லூரியிலேயே மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக கல்லூரிமுதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது சபீர் ஆலம், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர்கு. தங்கவேல், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுத்திட, நோய் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சேலம் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நாள்தோறும் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தற்போது கரோனா தடுப்பூசி போதிய அளவு இருப்பு உள்ளது.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அந்தந்த கல்லூரி வளாகத்திலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்படும்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE