கிருஷ்ணகிரி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் நேற்று 48.25 அடியாக உயர்ந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல், தென்பெண்ணை ஆறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 47.95 அடியாக இருந்தது.
நேற்று காலை 48.25 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 739 கனஅடியில் இருந்து 512 கனஅடியாக சரிந்தது. இதேபோல், கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடிக்கு 41.33 அடிக்கு தண்ணீர் உள்ளது.
அணைக்கு வரும் 408 கனஅடி தண்ணீர், ஆற்றிலும் பாசன கால்வாய்களிலும் திறந்துவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
நேற்று காலை 7 மணி நிலவரப்படி மழை அளவு மில்லிமீட்டரில், கிருஷ்ணகிரி அணை 59.4, கிருஷ்ணகிரி 40.6, பாரூர் 33.2, தேன்கனிக்கோட்டை 26, தளி 25, போச்சம்பள்ளி 20.2, அஞ்செட்டி 15.4, ஊத்தங்கரை 15, ராயக் கோட்டை 9, பெனு கொண்டாபுரம் 7.2, ஓசூர் 6, சூளகிரி 4 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
பாப்பிரெட்டிப்பட்டியில் மழை
தருமபுரி மாவட்டத்திலும் தொடர்ந்து 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): பாப்பிரெட்டிப்பட்டி 62.2, பாலக்கோடு 32, தருமபுரி 17, பென்னாகரம் 22, அரூர் 24, ஒகேனக்கல் 10 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்றும் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக நீடித்தது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் படிப்படியாக நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago