கிருஷ்ணகிரியில் குடியிருப்பு பகுதியில் மழைநீருடன், கழிவுநீர் தேங்கி நிற்பதால் மிகுந்த சிரமம் அடைந்து வருவதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசாலை அருகில் உள்ளது நல்லதம்பி செட்டி தெரு. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் முறையாக சாக்கடைக் கால்வாய் அமைக்காததால், சிறிய மழை பெய்தாலும் வீடுகளுக்குள் மழை நீருடன், சாக்கடைக் கழிவுநீரும் புகுந்து விடுகிறது. மேலும் தெரு முழுவதும் சேறும் சகதியும், கழிவுநீரும் தேங்கி பொதுமக்கள் நடக்கவே முடியாத நிலை உள்ளது. இதனை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் இதுவரை 3 முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு நடந்த சாலை மறியல் போராட்டத்தின்போது, அப்போதைய நகராட்சி ஆணையாளர், இப்பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாயை உடனே சரி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 4 நாட்களாக கிருஷ்ணகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. நேற்று கிருஷ்ணகிரி நல்லதம்பி செட்டி தெருவில் உள்ள குடியிருப்புகளில் மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்ததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காந்தி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த நகர போலீஸார், அவர்களை நகராட்சியில் புகார் அளிக்கும்படி சமாதானம் செய்தனர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago