வ.உ.சி.யின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும் என்று சென்னையில் நடைபெற்ற 75-வது சுதந்திர தினவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாவட்ட மைய நூலகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வஉசி மணி மண்டபத்தில் நாளை நடைபெறும் வ.உ.சி. பிறந்த நாள் விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. மேலும் அன்றைய தினம் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இதையொட்டி வ.உ.சி. மணிமண்டபத்தில் தூய்மை மற்றும் வர்ணம் பூசும் பணி நேற்று நடைபெற்றது.
மணலில் வ.உ.சி. உருவம்
வ.உ.சி.யின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி சிவராம் கலைக்கூட மாணவிகள் இந்துஜா செல்வி மற்றும் தீக்சனா ஆகியோர் வண்ண மணலை பயன்படுத்தி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிரதான கட்டிடத்தின் முன் வ.உ.சிதம்பரனாரின் உருவப் படத்தினை 150 சதுர அடி துணியில் உருவாக்கினர். சுமார் ஒன்றரை மணி நேரத்தில் அவர்கள் வரைந்து முடித்தனர். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்ததால் அவரை மண்ணின் மைந்தர் எனக்குறிப்பிடும் வகையில் பல்வேறு வகை வண்ண மணலால் ஓவியம் வரையப்பட்டதாக மாணவிகள் தெரிவித்தனர். மாணவிகளை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு மற்றும் அலுவலக ஊழியர்கள் பாராட்டினர்.
தென்காசி
தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி படத் திறப்பு விழா, போட்டித்தேர்வு பயிற்சி தொடக்க விழா, நூலகத்துக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நூல்கள் வழங்கிய தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், நகர திமுக செயலாளர் சாதிர், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ஜெகன்மோகன், கிருஷ்ணவேணி, அரசுஅலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
வட்டார நூலகர் பிரமநாயகம் நூலக வளர்ச்சி அறிக்கை அளித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன் சிறப்புரை யாற்றினார்.
விழாஏற்பாடுகளை நூலகர்கள் ஜீலியா ராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, ராஜேஸ்வரி, நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago