நெல்லை ரயில் நிலையத்தில் மருத்துவக் குழு முகாம் - கேரள பயணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை :

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும் நிலையில், தற்போது பள்ளிகள், கல்லூரிகள் திறந்துள்ளதால் பேருந்துகளில் கூட்டம் அதிகமுள்ளது.

இதுபோல பேருந்து நிலையங் கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் காலை, மாலை வேளைகளில் கூட்டம் காணப்படுகிறது. முகக்கவசம் அணிவதுடன், அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து அறிவு றுத்தி வருகின்றனர். கரோனா விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.

கேரளத்தில் கரோனா தொற்று அதிகமுள்ள நிலையில், அங்கிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் சுகாதார பணியாளர் குழுவினர் முகாமிட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். பரிசோதனை முடிவுகள் தெரியும்வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என, பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 10 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. இதில் 3 பேர் திருநெல்வேலி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். ராதாபுரம் வட்டாரத்தில் 4 பேர், வள்ளியூர் வட்டாரத்தில் 2 பேர், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மேகலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கடந்த 27-ம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரியை பரிசோதித்தபோது, பூச்சி கடியால் ஒருவித வைரஸ் தொற்று ஏற்பட்டு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது தெரியவந்தது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேகலிங்கபுரம் பகுதியில் வீடுவிடாக கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், அரசு மருத்துவமனை பூச்சியியல் துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியன், மலேரியா தடுப்பு அலுவலர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர் பெருமாள் உள்ளிட்டோர் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தினர்.

பாதிப்பு அதிகரிக்கவில்லை

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் கூறும்போது, “பெரும்பாலும் சுகாதாரமற்ற மணற்பாங்கான பகுதியில் ஒருவித பூச்சிகள் கடித்தால், அதன்மூலம் வைரஸ், பாக்டீரியா தொற்று ஏற்படுவது உண்டு. இது புதிதல்ல. ஏற்கெனவே இந்த பாதிப்பு இருக்கிறது. அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது கரோனா பாதிப்புக்குள்ளான 26 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் யாரும் மோசமான பாதிப்பில் இல்லை. கடந்த மாதத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20-க்கும் கீழாகவே இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுள்ளதால் தொற்று பாதிப்பு அதிகரிக்கவில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்