தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என். புதுக்குடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தின் அருகில் காட்டு மாட்டின் கால்கள், எலும்புகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் கிடந்தன. சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், தோட்டத்தின் உரிமையாளரான புளியங்குடியைச் சேர்ந்த அப்துல் வஹப் (43), அவரது மகன் முகமது நாகூர் பண்ணையார், அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர் கட்டுக்கம்பியால் மின்சார வேலி அமைத்து, அதில் மின்சாரம் பாய்ச்சி காட்டு மாட்டை வேட்டையாடியதும், அதனை வெட்டி இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அப்துல் வஹப், முகமது நாகூர் ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல, சிவகிரி அருகே கரும்புத் தோட்டத்தில் மின் வேலி அமைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடிய சிவகிரியைச் சேர்ந்த வீரையா (55) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “காட்டு மாடு வன உயிரின சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் முக்கிய வனவிலங்கு ஆகும்.
விவசாயிகள் மின்வேலி அமைப்பது வனஉயிரின பாதுகாப்பு சட்டத்துக்கு புறம்பான செயல். இதுபோன்ற குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கலாம். வன விலங்குகளால் ஏதேனும் தொல்லை ஏற்பட்டால் அதனை தடுக்கவும், விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கவும் வனத்துறை உறுதுணையாக இருக்கும். வனத்துறைக்கு உரிய நேரத்தில் தகவல் கொடுக்க வேண்டும் ” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago