மன அழுத்தத்தை குறைக்க - அரசு ஊழியர்கள் 5 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவுரை

By செய்திப்பிரிவு

மன அழுத்தத்தை குறைக்க அரசு ஊழியர்கள் 5 வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை திட்டப்பணிகள் சார்பில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வகுப்பு திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் நேற்று நடை பெற்றது. நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை சங்க இணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ரேணுகாம்பாள் முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் வரவேற்றார்.

மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து புத்தாக்க பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 509 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், கூட்டுறவுத் துறை சார்பில் 503 கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில், 321 கடைகள் முழு நேரக் கடைகளாகவும், 177 கடைகள் பகுதி நேரக்கடைகளாகவும், 5 கடைகள் மகளிர் கடைகளாகவும் செயல்பட்டு வருகின்றன. 299 பணியாளர்கள் ரேஷன் கடைகளில் பணியாற்றி வருகின்றனர். இதில், பலர் பணிச்சுமையால் மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிகிறது.

பொதுவாக மனிதர்களுக்கு உடல், மூளை, இதயம் ஆகியவை ஒரே நிலையில் இல்லாததால் தான் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதை போக்க மொத்தம் 5 வழிகள் உள்ளன. அதாவது, மூச்சுப்பயிற்சி, யோகா, விளையாட்டு, பொழுது போக்கு, நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவது போன்ற 5 அம்சங்களை பின்பற்றினால் மன அழுத்தம் தானாக சரியாகி விடும்.

அதேபோல, மனிதர்களுக்கு தூக்கம் மிக முக்கியம். தினசரி 8 மணி நேரம் உறங்க வேண்டும். நேரம் கடந்து உறங்குவதால் உடலில் ஹார்மோன் பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதன் மூலம் ரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உடல் ரீதியாக ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, எவ்வளவு தான் வேலை பளு இருந்தாலும், தினசரி இரவு 10 மணிக்கு உறங்ககச்சென்றுவிட வேண்டும். உறக்கத்தில் கனவு வந்தால் அது ஆழ்ந்த தூக்கம், அந்த உறக்கத்தை அனைவரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் இங்கு அளிக்கப்படும். அதை ரேஷன் கடை ஊழியர்கள் பின்பற்றிக் கொள்ள வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 57 குடும்ப அட்டைகள் உள்ளன. கரோனா சிறப்பு நிவாரண தொகையாக தமிழக அரசு வழங்கிய ரூ.4 ஆயிரம், 3 லட்சத்து 12 ஆயிரத்து 883 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 99.94 சதவீதமாகும். தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டம் அரசு நிவாரணத் தொகை வழங்கியதில் முதலிடத்தில் உள்ளது.

அதேபோல, கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய குரிசிலாப்பட்டு ரேஷன் கடை விற்பனையாளர் சங்கர் தமிழக முதல்வரிடம் சுதந்திர தினவிழாவில் சிறப்பு பதக்கம் பெற்றுள்ளார். அவரை போல அனைவரும் சிறப்பாக பணியாற்றி அரசின் விருதுகளை பெற வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், வேலூர் பொது விநியோகத்திட்ட துணைப் பதிவாளர் முரளிகண்ணன், கூட்டுறவு சார் பதிவாளர் தர்மேந் தர், திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE