ஆம்பூரில் கணவர் கண் எதிரே விபத்தில் மனைவி உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாண்றோர்குப்பம் லட்சுமிநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(53). இவர், எல்லை பாதுகாப்புப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவி நிர்மலாவை (47) இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஆம்பூரில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட நேற்று காலை 11 மணியளவில் சென்றார்.
ஆம்பூர் ராஜீவ்காந்தி சிலை அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆம்பூர் பேருந்து நிலையம் நோக்கி வந்த போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி முன்னாள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், நிர்மலா நிலை தடுமாறி விழுந்தார்.
அப்போது, லாரி சக்கரத்தில் சிக்கி நிர்மலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோவிந்தராஜூக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து, அங்கு வந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் நிர்மலா உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நகர காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வராஜ் (36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் காபிகாரன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40). பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, நாட்றாம்பள்ளி அடுத்த பூசாரியூர் அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதினார். இதில், படுகாயமடைந்த அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நாட்றாம்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago