பெண் ஐபிஎஸ். அதிகாரி பாலியல் புகார் தொடர்பான வழக்கில் முன்னாள் எஸ்பி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நேரில் ஆஜரானார். சிறப்பு டிஜிபி மீதான விசாரணை 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதிடெல்டா மாவட்டங்களில் அப்போதைய
தமிழக முதல்வர் பழனிசாமி, சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்கு வருமாறு அழைத்து, பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு ஆதரவாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி, அவரது கார் சாவியை பறித்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தின் அப்போதைய எஸ்பி ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆஜரானார். சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி சிறப்பு டிஜிபி ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுத்தாக்கல் செய்தார். அதனை நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது.
மேலும், இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வராது, எனவே இவ்வழக்கை இங்கு விசாரிக்கக்கூடாது என்று சிறப்பு டிஜிபி தரப்பில் முறையிடப்பட்டது. இதை கேட்டறிந்த குற்றவியல் நடுவர் கோபிநாதன், இவ்வழக்கை விசாரிக்க விழுப்புரம் கோர்ட்டுக்கு முகாந்திரம் இல்லை என்றால் அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டார்.
அதன் பின்னர் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி இவ்வழக்கு தொடர்பாக சில ஆவணங்களை கேட்டும், தன்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரியும் ஏற்கெனவே தனித்தனியாக தாக்கல் செய்த 2 மனுக்கள் மீதான விசாரணை நடந்தது.
முன்னாள் எஸ்பி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இவ்வழக்குக்கும், முன்னாள் எஸ்பிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, எனவே வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி வாதம் செய்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன், அதற்கு கடும் ஆட்சேபனை செய்ததோடு இவ்வழக்குக்கும் முன்னாள் எஸ்பிக்கும் சம்பந்தம் இருப்பதாக வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த குற்றவியல் மன்ற நடுவர் கோபிநாதன், இவ்வழக்கின் விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago