சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக மருந்தாளுநர்கள் ஒரே மாதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 மாதங்களுக்கு தற்காலிக மருந்தாளுநர்கள் நியமிக்க சுகாதாரத்துறை அறிவிப்பு செய்தது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் துணை இயக்குநர் தலைமையில் நேர்காணல் நடத்தி ஜூலை 26-ம் தேதி 14 மருந்தாளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் செப்.1-ம் தேதி 14 பேரையும் சுகாதாரத்துறை திடீரென பணி நீக்கம் செய்தது. இதையடுத்து தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிறகு இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலர் பி.மதுசூதன்ரெட்டியிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து சுகாதார துணை இயக்குநர் ராம்கணேஷ் கூறியதாவது: மாநிலம் முழுவதும் அறிவிப்பு செய்தாலும் சிவகங்கை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் அவர்கள் பணிபுரிந்த ஒரு மாதத்துக்குரிய ஊதியத்தை வழங்கியுள்ளோம். ஏற்கெனவே திருப்பூரிலும் பணி நீக்கம் செய்துவிட்டனர். அவர்களை பணியில் சேர்ப்பது குறித்து நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே முடிவு செய்ய முடியும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago