விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கோரி ஈரோட்டில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, ஆண்டுதோறும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில், ஈரோட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். வழிபாடுகளுக்குப் பிறகு அவை அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படும். இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அரசு தடை விதித்துள்ளது.
இதனைக் கண்டித்து, ஈரோடு இந்து முன்னணி சார்பில் பெரிய மாரியம்மன் கோயில் முன்பு, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து, மாவட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சக்தி முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் திண்டல் வேலாயுதசுவாமி கோயில், பெரியவலசு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் என மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியினர் கோயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்
திருச்செங்கோட்டில் தேசிய சிந்தனைப் பேரவை, இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதிக்கக்கோரி ஆபத்து காத்த விநாயகருக்கு விண்ணப்பம் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.தேசிய சிந்தனைப் பேரவை தலைவர் திருநாவுக்கரசு, இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் செந்தில் கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். தொடர்ந்து விநாயகருக்கு விண்ணப்பம் கொடுத்து பூஜைகள் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட விதிக்கப்பட்ட தடையால் சிலை தயாரிப்பாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் 1 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாட அனுமதிக்க வேண்டும், என போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago