பவானி அரசு விதைப் பண்ணையில், பாரம்பரிய நெல் ரகமான 60-ம் குறுவை 3 ஏக்கரிலும், தூய மல்லி 4 ஏக்கரிலும் நடவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என வேளாண் இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி தெரிவித்தார்.
உலக தென்னை தினத்தை முன்னிட்டு, பவானி அரசு விதைப் பண்ணையில், ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.சின்னசாமி தென்னங் கன்று நடவு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
பவானி குருப்பநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள அரசு விதைப் பண்ணையில் நெல் நாற்று நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பவானி அரசு விதைப் பண்ணையில், 61 ஏக்கர் பரப்பில் இந்த ஆண்டு நெல் விதைப் பண்ணை அமைத்து விதை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திலிருந்து பெறப்படும் கரு விதைகளைக் கொண்டு, அரசு விதைப் பண்ணையில் ஆதார நிலை விதைகளை உற்பத்தி செய்து, மாவட்டம் முழுவதும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
இந்த ஆண்டு, ஏ.டி.டி. 38, கோ52, கோ(ஆர்.)50, சி.ஆர். 1009, ஏடிடி39, விஜிடி1 போன்ற ரகங்கள் நாற்று விடப்பட்டுள்ளது. அத்துடன் புதிய முயற்சியாக தமிழக அரசு அறிவித்துள்ளபடி பாரம்பரிய நெல் ரகமான 60-ம் குறுவை 3 ஏக்கரிலும், தூய மல்லி 4 ஏக்கரிலும் நடவு செய்யத் திட்டமிடப் பட்டுள்ளது. அடுத்த பருவத்தில், ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு இவை விநியோகம் செய்யப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்வில் அரசு விதைப் பண்ணை மேலாளர் முருகேசன், வேளாண்மை அலுவலர் கோகுலவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago