தமிழக அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலை உயர்வை முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு விவரம்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாசனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறுவை நெல் சாகுபடி அறுவடை ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் இறுதிக்குள் ஏறத்தாழ 80 சதவீத அறுவடையும், மீதமுள்ளவை அக்டோபரிலும் நிறைவடையும்.
எனவே, தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை நெல் கொள்முதல் விலையை ஆகஸ்ட் முதல் அமல்படுத்த வேண்டும் என ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம். தமிழக அரசு இது தொடர்பாக மத்திய அரசை தொடர்பு கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
விவசாயிகளின் நலன் கருதி வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைப்படி மொத்த உற்பத்தி செலவுக்கு மேல் கூடுதலாக 50 சதவீதம் லாபக் கணக்கின் அடிப்படையில் தமிழக அரசு விலை வழங்க வேண்டும். அதன்படி பார்த்தால் சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,610, பொது ரகம் ரூ.2,590 என விலை வழங்க வேண்டும். ஆனால் தமிழக அரசு சன்ன ரகம் ரூ.2,060, பொது ரகம் ரூ.2,015 என விலையை அறிவித்துள்ளது.
விவசாயிகளின் நலன் கருதி ஆகஸ்ட் முதல் இந்த விலையை அமல்படுத்தியிருக்க வேண்டும். இனியும் கால தாமதம் செய்யாமல் செப்.1-ம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு இந்த விலை உயர்வை வழங்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு இந்த விலை உயர்வுக்கான வித்தியாசத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள், டிராக்டர் மூலம் இயங்கும் நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வட்ட அளவில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட உலர்த்துவான்களுடன் கூடிய உலோக சேமிப்புக் கலன்கள் நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago