செழியநல்லூர் குளம் முறையாக தூர்வாரப்படுமா? : பணிகளைத் தடுத்து நிறுத்திய விவசாயிகள்

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செழியநல்லூரிலுள்ள குளத்தை முறையாக தூர்வாரவில்லை என்று, அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அங்கு நடைபெற்ற பணிகளை விவசாயிகள் நேற்று தடுத்து நிறுத்தினர்.

இது தொடர்பாக, தெற்கு செழியநல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருநெல்வேலி தாலுகா தலைவர் டி. மணிசுடலை, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

மானூர் ஒன்றியம் செழியநல்லூரில் உள்ள பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான, 120 ஏக்கர் பரப்பளவுள்ள குளத்தின் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெற்றுவந்தது. செழியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த குளத்தின்மூலம் வாழ்வாதாரம் பெறுகிறார்கள். இந்த குளத்தை பலதலைமுறைகளாக தூர்வாரவில்லை. இது தொடர்பாக, வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை அடுத்து கடந்த 2017-2018-ல் குளத்தை தூர்வாரி குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், எப்பணிகளும் நடைபெறவில்லை. இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்களைக் கேட்டபோது, குளத்தை தூர்வாரி குடிமராமத்து செய்யப்பட்டு விட்டதாக பதில் அளித்துள்ளனர். இது தொடர்பாக, திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், இதுவரை தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நேரத்தில் எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக பொக்லைன் இயந்திரம் மூலம் குளத்து கரையிலுள்ள மண்ணை எடுத்து, அங்கு பணிகள் நடைபெற்றதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த குளத்தின் நீர்பரப்பை அளவு செய்து, முறையாக தூர்வாரி குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் நீர்வரத்து கால்வாய்களையும், மறுகால் செல்லும் ஓடைகளையும் செப்பனிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அங்கு குளத்தில் நடைபெற்ற பணிகளை, விவசாயிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2017-2018ல் குளத்தை தூர்வாரி குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்