திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 56 கல்லூரிகளில் 59 சதவீத மாணவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண் டுள்ளதாக ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார். கல்லூரி வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவிகளிடம் கரோனா வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் அவர், கல்லூரியில் கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்தார். பின்னர் அவர், கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்தும் முகாமை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் ஆட்சியர் பா.முருகேஷ் கூறும்போது, “பள்ளி மற்றும் கல்லூரி களில் சுகாதாரத் துறையின் நிலையான வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கல்வி நிலையங்களை சுகாதாரமாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 6 அடி சமூக இடைவெளி இருக்கும் வகையில், இருக்கை வசதிகள் ஏற்படுத்தி மாணவர்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுவதால், அதற்கேற்ப பாடத்திட்ட கால அட்டவணை தயாரிக் கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள 56 கல்லூரிகளில் இளநிலை பாடத் திட்டத்தின் கீழ் 2-ம் ஆண்டு படிக்கும் 12,217 மாணவர்களும், 3-ம் ஆண்டு படிக்கும் 12,816 மாணவர்களும் மற்றும் முதுநிலை பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் 1,958 மாணவர்களும் என மொத்தம் 26,987 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களில் 16 ஆயிரம் மாணவ, மாணவிகள் என 59 சதவீதம் பேர் மாணவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
கல்லூரிகளில் பணியாற்றும் 3,700 பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் 3,550 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஏதுவாக, கல்லூரி வளாகத்தில் முகாம் நடத்தப்படுகிறது” என்றார்.
இதில், உதவி ஆட்சியர் ரவி தேஜா, கோட்டாட்சியர் வெற்றி வேல், அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago