தமிழகத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்புகளுக்கான தேர்வு நேற்று (செப்.2) தொடங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில்,வேலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர் களுக்காக வேலூர் ஊரீசு மேல்நிலைப்பள்ளி, செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ் வரா மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வுக்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வு எழுத வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று காலை 10 மணியாகியும் தேர்வு அறைகளுக்கு செல்ல மறுத்தனர். மேலும், கரோனா பரவல் அச்சம் காரணமாக தங்களுக்கு ‘ஆன்லைன்’ வழியாக தேர்வு நடத்த வேண்டும் என்று கோரினர். இந்த தகவலறிந்த வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் அங்குலட்சுமி ஆகியோர் விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ‘ஆன்லைன் வழியாக தேர்வு எழுத அனுமதி அளிக்கவில்லை. அதற்கான அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே, வழக்கமான தேர்வை எழுதிவிட்டு உங்கள் கோரிக்கையை மனுவாக அளித்தால் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’ என்று உறுதியளித்தனர்.
இதனையேற்ற மாணவர்கள் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக தேர்வு அறைகளுக்குச் சென்றனர். அவர்களுக்கு சுமார் 15 நிமிடங்கள் அளவுக்கு கூடுதல் நேரம் அளிக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago