கோவை, திருப்பூர், நீலகிரியில் பள்ளிகள் திறப்பு : கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்கள் ஆய்வு

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டு, 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள்நடைபெற்றன. கோவையில் முதல் நாளில் 67 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.

பள்ளிகளில் ஒரு வகுப்பறையில், ஒரு இருக்கையில் இருவர் வீதம் மொத்தம் 20 பேர் மட்டுமே அமர அனுமதிக்கப்பட்டனர். கேரள எல்லைப் பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வர அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். நுழைவுவாயிலில் அனைவரின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களின் பெற்றோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் விவரத்தை தினசரி அறிக்கையாக பெற்று மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், இரண்டாம் தவணை தடுப்பூசி தேவைப்படுவோருக்கு தடுப்பூசி முகாம்கள் நடத்தவும் சுகாதாரத் துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதேபோல, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராகே.கே.புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக கோவை மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் என்.கீதா கூறும்போது, “கோவையில் 9,10,11,12-ம் வகுப்புகளில் மொத்தம் 1.76 லட்சம் மாணவர்கள் உள்ளனர். இதில், 67 சதவீதம் பேர் நேற்று பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர்” என்றார். கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள், 11 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 70 சதவீதம் மாணவர்கள் வந்ததாக மாநகராட்சி கல்விப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் ஆய்வு மேற்கொண்டார். கல்லூரி சாலையில் அமைந்துள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளும் நேற்று செயல்படத் தொடங்கின. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.ரமேஷ் கூறும்போது ‘‘திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 60,505 மாணவ, மாணவிகள் வந்துள்ளனர். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 66 சதவீதம் பேர் வந்திருந்தனர். 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் வருகை குறைந் திருந்தது’’ என்றார்.

உடுமலை

உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் கே.பழனிசாமி கூறும் போது, ‘‘கல்வி மாவட்டத்தில் 9-ம் வகுப்பில்45 சதவீதம் பேரும், 10-ம் வகுப்பில்66 சதவீதம் பேரும், பிளஸ் 1 வகுப்பில் 50 சதவீதம் பேரும், பிளஸ் 2-வில் 62 சதவீதம் பேரும் வந்திருந்தனர்” என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள210 பள்ளிகள் மற்றும் 6 கல்லூரிகள் திறக்கப்பட்டன. உதகை பெத்லேகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்