கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் 469 பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நேற்று தொடங்கப்பட்டன. கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளி, நகராட்சி பள்ளி, துறைமுகம் அரசு மகளிர் பள்ளி, திருப்பாதிரிபுலியூர் அரசு பெண்கள் பள்ளி, கடலூர் ஏஆர்எல்எம் மெட்ரிக் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:
பள்ளி ஆசிரியர்கள், அலுவலர் கள் மற்றும் பணியாளர்களுக்கு 94 சதவீதம் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறுகிறதா என பல்வேறு துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, கடலூர் கல்வி மாவட்ட அலுவலர் சுந்தரமூர்த்தி, புனித வளனார் பள்ளி முதல்வர் அருள்நாதன், நகராட்சி பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன், துறைமுகம் அரசு பெண்கள் பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் 172 உயர்நிலைப்பள்ளிகள், 185 மேல்நிலைப்பள்ளிகள் என 387 பள்ளிகள் நேற்று முதல் இயங்கின. விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்ப்பெரும்பாக்கம் அரசு பள்ளி, சரஸ்வதி மெட்ரிக் பள்ளிகளில் விழுப்புரம் மாவட்ட பள்ளிகள்கண்காணிப்பு அலுவலர் ராமேஸ்வர முருகன் முன்னிலையில் ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.அரசின் நிலையான வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியினை பின்பற்றி ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவ, மாணவியர்கள் மட்டும் இருக்கைகளில் அமர்த்தப் பட்டுள்ளனரா என்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் தூய்மைப் படுத்தப்பட்டு சுகாதாரமான முறையில் உள்ளதா என்பதையும் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 111 உயர்நிலைப் பள்ளிகளும், 133 மேல்நிலைப்பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்றன.
தியாகதுருகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் தரன் கரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago