கல்வராயன் மலையில் உள்ள முக்கிய நீர்பிடிப்புப் பகுதியான கைக்கான் வளவு பகுதியில் இருந்து வசிஷ்ட நதிக்கு தண்ணீர் கொண்டு வரும் கைக்கான் வளவு திட்டம் 3 மாதங்களுக்குள் நிறைவடைய வாய்ப்புள்ளது என பொதுப்பணத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றான வசிஷ்ட நதி கடந்த 10 ஆண்டுகளாக போதிய நீர்வரத்து இன்றி காணப்படுகிறது. நீர்வரத்து இல்லாமல் ஆற்றுப்படுகை நெடுக மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பு என அழிவு நிலையில் உள்ளது.
இந்நிலையில், முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாக இருக்கும் பெத்தநாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து வசிஷ்ட நதிக்கு தண்ணீர் வரக்கூடிய கைக்கான் வளவு என்ற இடத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை தடைகளால் நீர்வரத்து தடைபட்டுள்ளதாக நதிநீர் பாசன விவசாயிகள் கவலை தெரிவித்து வந்தனர்.
மேலும், கைக்கான் வளவில் தடுப்பணை மற்றும் கால்வாய் அமைத்து வசிஷ்ட நதிக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, ரூ.7.30 கோடி மதிப்பீட்டில் கைக்கான் வளவு திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, கைக்கான் வளவு பகுதியில் தடுப்பணை கட்டும் பணியும், அங்கிருந்து வசிஷ்ட நதிக்கு நீர் வரக்கூடிய ஓடையில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கைக்கான் வளவு என்ற இடத்தில் நீதிமன்ற உத்தரவுபடி தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி 30 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது. ஓடைக்கான நீர்வரத்தை ஏற்படுத்த சீரான இடைவெளியில் 8 தொட்டிகள் அமைத்து, அங்கிருந்து நீர் வர வசதியாக 295 மீட்டர் தூரம் கான்கிரீட் கால்வாய் அமைக்கப்படுகிறது.
இதில், 175 மீட்டர் நீளம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 3 மாதங்களுக்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். பணிகள் நிறைவுற்றதும் 50 கனஅடி நீர் வரத்துக்கு வாய்ப்பு ஏற்படும்,
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago