நிதி நிறுவன பிரதிநிதிகளின் நெருக்கடியால் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், விவசாயிகளும் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகேயுள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து (75). விவசாயியான இவர், தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் கடன் வாங்கியிருந்தார். கரோனா ஊரடங்கால் மருதமுத்து 3 மாதம் தவணைத் தொகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, நிதி நிறுவனத்தின் பிரதிநிதிகள் இருவர், நேற்று முன்தினம் மருதமுத்துவின் வீட்டுக்குச் சென்று நிலுவைத் தொகையை செலுத்தும்படி நிர்பந்தித்துள்ளனர். இதனால், மனமுடைந்த மருதமுத்து, வீட்டுக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மருதமுத்துவின் மகன் வெங்கடேஷ் அளித்த புகாரின்பேரில், ஜீயபுரம் போலீஸார் அங்கு சென்று மருதமுத்துவின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்குப் பின், மருதமுத்துவின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர். மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சிவசூரியன், தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு ஆகியோர் தலைமையில் விவசாயிகள், அரசு மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மருதமுத்துவை தற்கொலைக்குத் தூண்டிய நிதி நிறுவன பிரதிநிதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.
அதேவேளையில், மருதமுத்துவின் உடலை அவரது உறவினர்கள் வாங்க முடியாது என்று விடாப்பிடியாக இருந்தனர். தொடர்ந்து, மருதமுத்துவைத் தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்ததையடுத்து, மருதமுத்துவின் உடலை அவரது உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago