திருச்சியில் வட மாநில சிறுவர்கள் 7 பேர் மீட்பு : கட்டுமானப் பணிக்காக அழைத்து வந்த 3 புரோக்கர்கள் கைது

By செய்திப்பிரிவு

வடமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு குழந்தைத் தொழிலாளர்களாக கட்டுமானப் பணிக்கு அழைத்து வரப்பட்ட 7 சிறுவர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் மீட்டனர். இவர்களை அழைத்து வந்த புரோக்கர்கள் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் பனாரஸிலிருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில் நேற்று முன்தினம் மாலை திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது, இந்த ரயிலில் இருந்து 13,15 மற்றும் 16 வயதுடைய 7 சிறுவர்களுடன் வந்திறங்கிய 3 பேரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் டி.வீரகுமார் மற்றும் ஆர்.வாசுதேவன் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 3 பேரும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத், சிவ்பூஜன், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கிர்வார்லால் சவுகான் என்பதும், இவர்கள் உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலிருந்து 7 சிறுவர்களை தமிழகத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக அழைத்து வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் திருச்சி சைல்டு லைன் அமைப்பு மூலம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுவர்களில் 3 பேர் உத்தரபிரதேச மாநிலத்தையும், 4 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.

இதுதொடர்பாக திருச்சி ரயில்வே போலீஸார் ராம்நாத், சிவ்பூஜன், கிர்வார்லால் சவுகான் ஆகிய மூவரையும் குழந்தைகள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்