ஆஸ்திரேலியா வாழ் தமிழ் குழந்தைகளுக்கு இணையவழி மூலம் - திருக்குறள் கற்றுத் தரும் தஞ்சாவூர் மாணவி :

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய வாழ் தமிழ் குழந்தைகளுக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி இணையவழி மூலம் திருக்குறள் கற்றுத் தருகிறார்.

தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் அருகே உள்ள கிட்டப்பா வட்டாரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்-சாந்தி தம்பதியின் மகள் தேவ(14). இவர், அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 5-ம் வகுப்பு படிக்கும்போது 1,330 குறள்களையும் முழுமையாகப் படித்து, ஒப்பித்தவர். தொடர்ந்து, 2 ஆண்டுகளாக தனது வீட்டு வாசலில் திருக்குறள் பலகை அமைத்து, அதில் நாள்தோறும் திருக்குறளையும், அதற்கான பொருளையும் விளக்கி எழுதி வருகிறார். இதுதொடர்பான தகவல்களை இணையதளத்தில் பார்த்த ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள், தங்களது குழந்தைகளுக்கு திருக்குறள் கற்றத்தர தேவயை தொடர்புகொண்டு கேட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் நாள்தோறும் இணையவழி மூலம் ஆஸ்திரேலிய வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கு திருக்குறள் வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறார். இதில், 5 வயது முதல் 13 வயதுக்குட்பட்ட 13 பேர் திருக்குறள் கற்று வருகின்றனர். இதுவரை 34 அதிகாரங்களிலிருந்து 340 திருக்குறள்களை தேவ கற்றுத் தந்துள்ளார்.

இதுகுறித்து தேவ கூறியது: திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில், ஆஸ்திரேலிய குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறேன். நாள்தோறும் பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரை ஆஸ்திரேலிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் கற்றுத் தருகிறேன். இது, ஆஸ்திரேலிய நேரப்படி இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை. இதில், ஒவ்வொரு நாளும் 2 திருக்குறள் கற்றுத் தருகிறேன். சனிக்கிழமை மட்டும் வகுப்பு கிடையாது. ஒருவாரம் முழுவதும் கற்பிக்கப்படும் 10 குறள்களும் ஞாயிற்றுக்கிழமை திருப்புதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் பிழையின்றி திருக்குறளை ஒப்பிக்கின்றனர். இந்தப் பணி செய்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் தேவ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்