காட்டுமன்னார்கோவில் பகுதியில் சம்பா பருவ சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதிகளில் காவிரி தண்ணீர் மூலம் சுமார் 1 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்து, அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கீழணையில் தேக்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது வீராணம் ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி நிரம்பியுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாசனத்துக்காக கீழணையில் இருந்து வடக்கு ராஜன்வாய்க்கால், வடவாறு மற்றும் சிறிய வாய்க்கால்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருகிறது. காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள பிள்ளையார் தாங்கல், எடையார், மோவூர், நடுத்திட்டு, திருநாரையூர், அழிஞ்சிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “சரியான நேரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago