ஈரோட்டில் 3 மாதத்தில் 89 பேர் கைது - தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்போர், வாங்குவோர் மீது நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்பவர்கள் மட்டுமல்லாது, அதனை வாங்குவோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்ந்து வருகிறது. வெள்ளைத்தாளில் எண்களை எழுதி அவற்றிற்கு குலுக்கல் நடத்தி பரிசு வழங்கும் சூதாட்டத்தில் ஏராளமானவர்கள் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். இது தொடர்பான புகார்கள் வந்ததையடுத்து, மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து எஸ்பி அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:

சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்பவர்கள், போலியாக எண்களை வெள்ளைத்தாளில் எழுதி வெளி மாநில லாட்டரி சீட்டுகள் என்றும், பரிசு கண்டிப்பாக விழும் என்றும் கூறி விற்பனை செய்கின்றனர். இந்த எண்களை வாட்ஸ்அப் செயலி மூலமாக அனுப்புவதோடு, ஒரு சில எண்களுக்கு பரிசு விழுந்ததாகக் கூறி மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். தடை செய்யப்பட்ட லாட்டரியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலமாகவோ விற்பனை செய்வது மற்றும் ஏமாற்றுவது குற்றமாகும். அதேபோன்று தடை செய்யப்பட்ட லாட்டரிகளை வாங்குவதும் குற்றமாகவே கருதப்படும். அவர்கள் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த மூன்று மாதத்தில் மட்டும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை சம்பந்தமாக 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாட்டரி சீட்டு விற்பனை குறித்து, 9655220100 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்