ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான சட்டத் திருத்தத்தை சட்டப்பேரவையில் திமுக அரசு நிறைவேற்றியதைக் கண்டித்தும், அதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்ததைக் கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் நேற்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையிலும், ரங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன் அதிமுக புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையிலும், தென்னூர்- தில்லைநகர் சந்திப்பில் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையிலும் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 623 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் மறியலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் அப்துல்ரகுமான் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று, விராலிமலை, இலுப்பூர், கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நகரச் செயலாளர் ராஜ பூபதி, ஒன்றியச் செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம் உள்ளிட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 170 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் அரசு கொறடாவும், மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், ஜெயங்கொண்டம் நான்கு சாலையில் முன்னாள் எம்எல்ஏ கே.என்.ராமஜெயலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 28 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல, செந்துறையில் மறியலில் ஈடுபட்ட 50பேரும், திருமானூரில் 22 பேரும், தா.பழூரில் 29 பேரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் ரயிலடியில் நேற்று அதிமுக தொகுதி செயலாளர் துரை.திருஞானம் தலைமையில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவையாறு பேருந்து நிலையம் அருகே திருவையாறு ஒன்றியச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன் தலைமை வகித்தார். முன்னாள் எம்பி ஆர்.கே.பாரதிமோகன் முன்னிலை வகித்தார். இதில், ஒன்றியச் செயலாளர்கள் அறிவழகன், என்.ஆர்.வி.எஸ்.செந்தில், அசோக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நாகை புதிய பேருந்து நிலையத்தில், அதிமுக நாகை நகர அவைத் தலைவர் அறிவழகன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருமருகல் எம்ஜிஆர் சிலை அருகே ஒன்றியச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பக்கிரிசாமி ஆகியோர் தலைமையிலும், வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் அதிமுக நகரச் செயலாளர் நமச்சிவாயம் தலைமையிலும், தலைஞாயிறு கடைத்தெருவில் பேரூர் செயலாளர் பிச்சையன் தலைமையிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago